10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்று..! பள்ளிகள் திறப்பால் நேர்ந்த விபரீதம்..!
17 November 2020, 3:21 pmஅமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய் தோன்றியதிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, இந்த வாரம் பதிவான புதிய சிறுவர் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 1,12,000 ஆகும். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வாராந்திர அதிகரிப்பில் இதன் மூலம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், நவம்பர் 12’ஆம் தேதி நிலவரப்படி, மொத்த சிறுவர் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10,39,464 எனக் கூறப்படுகிறது. மேலும் இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையில் சுமார் 11.5 சதவீதமாகும்.
கொரோனா காரணமாக கடுமையான பாதிப்புகள் குழந்தைகளிடையே அரிதானது என்று தோன்றியிருந்தாலும், குழந்தைகளுக்கு நீண்டகால பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதில் வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நீண்டகால உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வழிகள் உட்பட, அவர்களின் உணர்ச்சி மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என அறிக்கை கூறியுள்ளது.
“ஒட்டுமொத்த விகிதம் மக்கள் தொகையில் 1,00,000 குழந்தைகளுக்கு 1,381 பாதிப்புகள்” என்று ஏஏபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு வரை, சிறுவர்களிடையே மிகக் குறைந்த அளவில் இருந்த கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை, பள்ளிகள் திறந்த பின், மளமளவென உயர்ந்து தற்போது வாரம் 1 லட்சம் என மொத்தம் 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டதே, சிறுவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.