சீன தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி..! பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்..!
19 January 2021, 9:19 pmநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவசரகால பயன்பாட்டிற்காக சீன சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் சீன தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளித்தது.
பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசிம் ரவூப் பேசும்போது, தேசிய சுகாதார நிறுவனம் சினோபார்மின் தடுப்பூசியை அதன் பெயரில் பதிவு செய்துள்ளது என்றார்.
“அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதற்கு வழி வகுக்கும்” என்று அவர் ஊடகங்களிடம் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ஏற்கனவே 1.1 மில்லியன் டோஸ் சினோபார்மின் கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளதால் அதன் இறக்குமதி செயல்முறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வரை, கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானில் 11,055 பேர் இறந்துள்ளதாக தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,800 நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,23,011’ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் மருத்துவர்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாகிஸ்தான் மருத்துவ சங்கம், தடுப்பூசிகளின் இறக்குமதிக்கான பரிசீலனைகள் மற்றும் அவற்றின் செயல்திறன் விகிதங்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
0
0