மயிரிழையில் தப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி..!

6 March 2021, 4:06 pm
Imran_khan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அந்நாட்டு தேசிய சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு மத்தியில், கடுமையாக போட்டியிட்டு செனட் தேர்தலில் நிதியமைச்சர் அடைந்த தர்மசங்கடமான தோல்விக்கு பின்னர், இம்ரான் கான் அரசு தப்பிக்குமா என சந்தேகம் கிளம்பிய நிலையில் மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார். 

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் உத்தரவுப்படி கூட்டப்பட்ட சிறப்பு அமர்வின் போது, பிரதமர் இம்ரான் கான் 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 178 வாக்குகளைப் பெற்றார். பெரும்பான்மைக்கு மொத்தம் 172 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 6 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

11 கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை புறக்கணித்ததால் எதிர்க்கட்சி இல்லாமல் இந்த சோதனை நடந்தது.

முன்னதாக கடந்த புதன்கிழமை, இம்ரான் கானின் அமைச்சக்கரவையில் நிதியமைச்சராக இருந்த அப்துல் ஹபீஸ் ஷேக் செனட் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தார்.

தோல்விக்குப் பின்னர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியது. வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி சபையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக ஒற்றை அம்ச தீர்மானத்தை முன்வைத்தார்.

342 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் மொத்தம் 172 வாக்குகள் எளிய பெரும்பான்மைக்கு தேவைப்பட்டன. ஆளும் கூட்டணியில் 181 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் அதன் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பைசல் வவுடா ராஜினாமா செய்த பின்னர், அதன் வலிமை 180’ஆகக் குறைக்கப்பட்டது. எதிர்க்கட்சி கூட்டணியில் சபையில் 160 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு இருக்கை காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0