ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல்வராக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் தேர்வு..!

1 December 2020, 2:09 pm
Vote_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் காலித் குர்ஷீத் நேற்று கில்கிட்-பால்டிஸ்தானின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் அம்ஜத் உசேன் 9 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் குர்ஷீத் 22 வாக்குகளைப் பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் அம்ஜத் அலி ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தற்போது முதல்வர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையே கில்கிட்-பால்டிஸ்தானில் தேர்தலை நடத்த முடிவு செய்ததற்காக இந்தியா பாகிஸ்தானை கண்டித்துள்ளதுடன், இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தின் நிலையை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் சட்டபூர்வமானது இல்லை என்றும் கூறியுள்ளது.

கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகள் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழு யூனியன் பிரதேசங்களும் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதையும் இந்தியா தெளிவாக பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.

நவம்பர் 15 ஆம் தேதி கில்கிட்-பால்டிஸ்தானில் சட்டமன்றத்தின் 23 இடங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. போட்டியாளர்களில் ஒருவர் இறந்த பின்னர் ஒரு தொகுதியின் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் இம்ரான் கானின் கட்சி 10 இடங்களை வென்றது. சுயேட்சை வேட்பாளர்கள் ஏழு இடங்களையும், பிபிபிக்கு மூன்று, பிஎம்எல்-என் இரண்டு இடங்களையும், ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பாஸ்ல் மற்றும் மஜ்லிஸ் வஹதத்-இ-முஸ்லிமீன் தலா ஒரு இடங்களையும் வென்றனர்.

ஆறு சுயேட்சை வெற்றியாளர்கள் மற்றும், கட்சி வென்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஆறு ஒதுக்கப்பட்ட இடங்களும் உள்ள நிலையில், 33 பேர் கொண்ட அவையில் 22 இடங்கள் இம்ரான் கானின் கட்சிக்கு கிடைத்தது.

2010’இல் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போதைய சட்டமன்றத்திற்கான மூன்றாவது தேர்தல் இதுவாகும்.

பாரம்பரியமாக, பாகிஸ்தானில் ஆளும் கட்சியே கில்கிட்-பால்டிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முதல் தேர்தலில் பிபிபி 15 இடங்களைப் பெற்று வென்றது. 2015 ஆம் ஆண்டில் அப்போதைய ஆளும் கட்சியான பிஎம்எல்-என் 16 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0