நாளை நாடாளுமன்ற தேர்தல்… அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : பாகிஸ்தானில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 9:26 pm
Bomb Blast
Quick Share

நாளை நாடாளுமன்ற தேர்தல்… அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : பாகிஸ்தானில் பயங்கரம்!!

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது . இதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

அடுத்ததாக, கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது, இதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த பலர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது,

பலுசிஸ்தான் பஞ்ச்கூரில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே ஒரு பையில் குண்டு வைக்கப்பட்டு, அது ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது என கூறினார். மேலும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக குவெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு பற்றி பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறுகையில், வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க, பயங்கரவாதிகள் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும், இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Views: - 1090

0

0