“நலமோடு உள்ளேன்’..! கொரோனா தொற்றுக்கு ஆளான டிரம்ப் வீடியோ வெளியீடு..!

By: Sekar
4 October 2020, 11:09 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அவர் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரமாக காய்ச்சல் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

“ஜனாதிபதிக்கு கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் எதுவும் இல்லை” என்று டிரம்பின் மருத்துவர் டாக்டர் சீன் கான்லி நேற்று ஜனாதிபதியின் உடல்நலம் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையில் தெரிவித்தார்.

74 வயதான டிரம்ப் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு வெளியே பேசிய டாக்டர் கான்லி, “ஜனாதிபதி வியாழக்கிழமை லேசான இருமல் மற்றும் குறைந்த அளவிலான மூச்சுத் திணறல், சோர்வு இருப்பதாகக் கூறினார். இவை அனைத்தும் தீர்க்கப்பட்டு அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது. இன்று காலை, ஜனாதிபதி மிகச் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.” என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். டாக்டர்கள் தனக்கு அளித்து வரும் சிகிச்சைக்கு நன்றி தெரிவித்ததோடு, சிகிச்சையை கடவுளிடமிருந்து கிடைக்கும் அற்புதங்கள் என்று அழைத்தார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்தே, தான் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் தனது பிரச்சாரத்தை முடிக்க விரைவில் திரும்பி வருவேன் என்றும் கூறினார். 

டிரம்ப் மேலும், “இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு நடந்தது. நான் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களுக்காகவும் போராடுகிறேன். நாங்கள் நிச்சயம் இந்த கொரோனா வைரஸை வெல்லப்போகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இப்போது நோய் கண்டறியப்பட்டு 72 மணிநேரம் மட்டுமே ஆகியுள்ளது எனத் தெரிவித்த டாக்டர் கான்லி, கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் வாரம் குறிப்பாக ஏழு முதல் 10 நாளும் இந்த நோயின் போக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். மற்றொரு மருத்துவர் கோல் சீன் என் டூலி, அதிபர் டிரம்ப் ஆக்ஸிஜன் சுவாசத்தோடு இல்லை என்றும் சுவாசிக்கவோ, சுற்றி நடக்கவோ சிரமப்படுவதில்லை என்று கூறினார்.

Views: - 47

0

0