ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்:அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி

Author: Udhayakumar Raman
21 September 2021, 9:49 pm
Quick Share

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புடின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.கீழவையில் மொத்தமுள்ள 450 இடங்களில், 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 225 இடங்களுக்கு கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.

இதன்படி, ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு, கடந்த 17-ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது. அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அத்துடன், மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கீழவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஆளும் கட்சி மறுத்துள்ளது. நாடாளுமன்ற கீழவையில் அதிபர் புடினின் கட்சிக்கு தற்போது 334 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போதைய தேர்தல் மூலம் அந்த கட்சி 315 இடங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இதற்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் அதிபர் புடினுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது. தேர்தலில் மாபெரும் வெற்றி அளித்த மக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றி தெரிவித்து உள்ளார்.

Views: - 381

0

0