தலைவர் பொறுப்பிலிருந்து ரவுல் காஸ்ட்ரோ விலகல்…! காஸ்ட்ரோ குடும்ப ஆதிக்கத்திற்கு விடைகொடுக்கும் கியூபா..!

18 April 2021, 1:53 pm
castro-diaz-canel_updatenews360
Quick Share

கியூபாவின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மறைந்த கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் முதல் நாளில் பேசிய ரவுல் காஸ்ட்ரோ, இளைய தலைமுறைகளுக்கு வழிவிடும் வகையில், தலைமைப் பொறுப்பில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

“எனது தோழர்களின் வலிமை மற்றும் முன்மாதிரியான தன்மை மற்றும் புரிதலில் நான் தீவிரமாக நம்புகிறேன், நான் வாழும் வரை, தாய்நாடு, புரட்சி மற்றும் சோசலிசம் ஆகியவற்றைப் பாதுகாக்க நான் என்றும் தயாராக இருப்பேன்.” என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.

ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக ஏப்ரல் 2011 முதல் பணியாற்றினார். மேலும் அவர் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்த தனது சகோதரருக்கு உதவியாக நாட்டின் அதிகார அடுக்கில் பிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையில் சர்வ வல்லமை பொருந்திய நபராக திகழ்ந்து வந்தார். 

ரவுல் காஸ்ட்ரோ மேலும் 2008 முதல் 2018 வரை நாட்டின் ஜனாதிபதியாகவும், பிடல் காஸ்ட்ரோவின் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் செயல் தலைவராகவும் பணியாற்றினார்.

கரீபியன் தீவு தேசமான கியூபாவில் பல தசாப்த கால அதிகாரத்திற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ 2016’இல் இறந்தார். ரவுல் காஸ்ட்ரோ விலகியவுடன் தற்போதைய ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கேனல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவுல் காஸ்ட்ரோவின் நீண்டகால துணைத் தலைவரான ஜோஸ் ரமோன் மச்சாடோவும் பொலிட்பீரோவில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கியூபா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் இருவரும் விலகினால், கியூபா புரட்சியில் பங்கேற்ற புரட்சிகர வீரர்கள் எவரும் பொலிட்பீரோவில் இல்லாத நிலை முதல்முறையாக ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 47

0

0