எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார்.! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..!

4 March 2021, 9:20 pm
Imran_khan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச் 6 அன்று நடைபெற உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செனட் தேர்தலைத் தொடர்ந்து நட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், நாட்டின் தேர்தல் ஆணையம் ரகசிய வாக்குச்சீட்டு மூலம் செனட் தேர்தல்களை நடத்தி பணம் சம்பாதித்தவர்களை பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார்.

“ஒரு செனட்டராக ஆக விரும்பும் ஒருவர் பணத்தைப் பயன்படுத்துகிறார். அவர்கள் யாரை வாங்குகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆகவே நான் அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அதன் பின்னர் நான் எங்கள் ஜனநாயகத்துடன் என்ன நகைச்சுவை நடக்கிறது என்று ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினேன்? இது என்ன வகையான ஜனநாயகம்?” என இம்ரான் கான் தனது உரையில் கூறினார்.

பாகிஸ்தானின் நிதியமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக், முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியால் முக்கியமான செனட் தேர்தலில் தோல்வியடைந்தார். செனட்டரைத் தேர்ந்தெடுக்க 172 வாக்குகள் தேவை எனும் நிலையில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ) 182 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதாகக் கூறியது.

“யூசுப் ராசா கிலானிக்கு 169 வாக்குகளும், ஷேக்கிற்கு 164 வாக்குகளும் கிடைத்தன. ஏழு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. மொத்த வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 340 ஆகும்” என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இம்ரான் கட்சிக்கு எதிராக அறிவித்தது.

இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் மேல் சபையில் பெரும்பான்மையாக தங்கள் நிலையை நிலைநிறுத்த முடிந்தது. எதிர்க்கட்சிகள் இப்போது தலைவர் மற்றும் துணைத் தலைவரின் இருக்கைகளை பெற முட்டி மோதி வருகின்றன. இந்த முதல் இரண்டு பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 12’ஆம் தேதி ரகசிய வாக்குப்பதிவு மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்ட 11 கட்சிகள் கொண்ட பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், 2018 தேர்தலில் இராணுவத்தின் உதவியுடன், அவர்களின் கைப்பாவையாக பிரதமர் இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இம்ரான் கானை ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மார்ச் 6’ஆம் தேதி இம்ரான் கான் அரசின் மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இம்ரான் கானுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் தான், இவ்வாறு பேசுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Views: - 26

0

0