நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள்: 4 மாதங்களுக்கு பிறகு 30 பேர் விடுவிப்பு…!!

Author: Aarthi Sivakumar
23 October 2021, 12:55 pm
Quick Share

லாகோஸ்: நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 30 கல்லூரி மாணவர்கள் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், கெப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில், 70 மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டனர். மேலும், ஒரு மாணவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால், பெற்றோர் மிகுந்த அச்சமும், கவலையும் கொண்டிருந்தனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று 30 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எவ்வாறு மீட்கப்படனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் மட்டும் நைஜீரியாவில் 1,400 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என யுனிசெப் தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 754

0

0