சிறையிலடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு எந்நேரத்திலும் மரணம்..? மருத்துவர்கள் பரபரப்பு அறிக்கை..!

18 April 2021, 3:58 pm
Alexei_Navalny_Russia_Updatenews360
Quick Share

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய அரசின் எதிர்ப்பாளர் அலெக்ஸி நவல்னி உடல்நலம் விரைவாக மோசமடைந்து வருவதால் எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எதிர்கட்சித் தலைவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்தனர்.

மார்ச் 31’ஆம் தேதி, ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக முக்கியமான எதிர்ப்பாளர் உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்பட்ட முதுகுவலி மற்றும் அவரது கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மைக்கு முறையான மருத்துவ சிகிச்சை கோரினார்.

முன்னதாக நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென், நவல்னிக்கு சிகிச்சையை வழங்க வலியுறுத்தப்பட்டு வரும் சர்வதேச போராட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரது நிலைமை முற்றிலும் நியாயமற்றது என்று ஜோ பிடென் விவரித்தார்.

44 வயதான நவல்னி கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மாஸ்கோவிலிருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போக்ரோவ் நகரில் உள்ள ஒரு தண்டனைக் காலனியில் பழைய மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

நவல்னியின் தனிப்பட்ட மருத்துவர் அனஸ்தேசியா வாசிலியேவா மற்றும் இருதயநோய் நிபுணர் யாரோஸ்லாவ் ஆஷிக்மின் உட்பட மேலும் மூன்று மருத்துவர்கள் சிறை அதிகாரிகளிடம் உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

“எங்கள் நோயாளி எந்த நிமிடமும் இறக்கக் கூடும்” என்று ஆஷிக்மின் நேற்று பேஸ்புக்கில் கூறினார். எதிர்க்கட்சி அரசியல்வாதியின் உயர் பொட்டாசியம் அளவை சுட்டிக்காட்டி, நவல்னியை தீவிர சிகிச்சைக்கு நகர்த்த வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விஷம் கொடுக்கப்பட்டு பின்னர் நவல்னி தப்பிப்பிழைத்தார். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு ரஷ்ய அரசு மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உண்ணாவிரதம் அவரது நிலையை மோசமாக்கியிருக்கலாம் என்று அவரது மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்தத்தில் பொட்டாசியம் அளவு லிட்டருக்கு 6.0 மிமீல் (மில்லிமோல்) அதிகமாக இருந்தால் பொதுவாக உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. நவல்னிக்கு இது 7.1 ஆக இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“இதன் பொருள் பலவீனமான சிறுநீரக செயல்பாடு மற்றும் தீவிர இதய பிரச்சினைகள் எந்த நிமிடமும் ஏற்படக்கூடும்” என்று வாசிலியேவாவின் ட்விட்டர் கணக்கில் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

Views: - 50

0

0