ஆஸ்திரேலிய ராணுவ வீரர் குறித்து போலி புகைப்படம்..! சீனாவை வெளுத்த ஆஸ்திரேலிய பிரதமர்..!
30 November 2020, 6:53 pmசீன அரசுக்குச் சொந்தமான ஒரு ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய ராணுவ வீரர் ஒருவரின் போலி புகைப்படம் உண்மையிலேயே அருவருப்பானது என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், அதை அகற்றுமாறு தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கூறினார்.
இந்த படத்தை வெளியிட்டதைக் கண்டித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் ஒரு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆஸ்திரேலிய ராணுவ வீரர் ஆப்கானிஸ்தான் குழந்தையின் தொண்டையில் கத்தியை வைத்திருப்பதாக சித்தரித்தது. இந்த மோசமான செயலுக்காக சீனா மன்னிப்புக் கோர வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இன்று வெளியிட்ட ட்வீட்டை நீக்குமாறு ஆஸ்திரேலிய அரசு ட்விட்டர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
“இது முற்றிலும் மூர்க்கத்தனமானது மற்றும் எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று மோரிசன் கூறினார். “சீன அரசாங்கம் இந்த செயலுக்கு முற்றிலும் வெட்கப்பட வேண்டும். இது உலகின் பார்வையில் அவர்களின் மதிப்பை மேலும் குறைக்கிறது.” என ஸ்காட் மோரிசன் மேலும் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆஸ்திரேலியா சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் அந்நிய முதலீடு, தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைக் கொள்கை குறித்த குறைகளின் பட்டியலை சீனா கோடிட்டுக் காட்டியது. மேலும் ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக உறவுகளைக் கொண்ட சீனாவுடன் இருதரப்பு உறவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சீன கூறியது.
சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவில் பதட்டங்களுக்கு மத்தியில் சீனா நடந்துகொள்ளும் விதம் குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கவனித்து வருவதாக மோரிசன் கூறினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுவுக்கு 212.1% வரை தற்காலிகமாக இறக்குமதிக் கட்டணங்களை விதிக்கப்போவதாக சீனா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
0
0