இந்தியாவின் சொல்படி ஆடும் நவாஸ் ஷெரீப்..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புலம்பல்..!

Author: Sekar
2 October 2020, 7:35 pm
Imran_Khan_Nawz_Sherrif_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) பிரிவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதன் அரசியல் தலைவர்களுக்கும் ராணுவத்திற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். 1947’இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த பிரதமரும் தன்னுடைய ஐந்தாண்டு கால முழு பதவிக் காலத்தை முடித்ததில்லை எனும் சோகமான பின்னணியைக் கொண்ட நாடு பாகிஸ்தான்.

1958 வரை கவர்னர் ஜெனரல் மற்றும் குடியரசுத் தலைவர்கள் தங்களுக்கு ஒத்துப் போகாததால் கலைக்கப்பட்ட ஆட்சிகள் ஏராளம். 1958’இல் முதல்முறையாக அயூப் கான் எனும் ராணுவத் தளபதி கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், ருசி கண்ட பூனையான பாகிஸ்தான் ராணுவம் அதற்குப் பிறகு எந்த பிரதமரையும் முழு பதவிக் காலத்தை நிறைவு பெற விட்டதில்லை.

இதிலிருந்து விதி விலக்காக 2013’ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்ததால், 5 ஆண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊழல் வழக்கில் 2017’இல் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதமர்களும் இந்திய தலைமையுடன் நெருக்கம் காட்டியே வந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கலகம் செய்து ஆட்சிகளைக் கவிழ்த்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் 2018 பாராளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் ராணுவம் தனக்கு ஆதரவான இம்ரான் கானை சட்டவிரோதமாக தேர்தலில் மோசடி செய்து பிரதமர் பதவியில் அமர்த்தியதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை நிரூபிக்கும் விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் ராணுவத்தின் கைப்பாவையாகவே இம்ரான் கான் நடந்து வருகிறார்.

இதற்கிடையே நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் ராணுவம் தலையிடுவதால் பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் ஊழல் வழக்கில் சிறை சென்ற நவாஸ் ஷெரீப் தற்போது உடல்நலக் குறைவால் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசில் ராணுவத்தின் தலையீட்டை களைவதும், இம்ரான் அரசாங்கத்தை வெளியேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நாட்டின் சக்திவாய்ந்த இராணுவம் ஒட்டுமொத்தமாக அரசியல் தலையீட்டை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் ஒரு தொலைக்காட்சி உரையில், இம்ரான் கானை “தேர்ந்தெடுத்த, திறமையற்ற, பைத்தியம்” என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது குறித்து அவருக்கு எந்த அறிவும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் சமா டிவியில் நேற்று ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில் இம்ரான் கான், “நவாஸ் ஆபத்தான விளையாட்டை ஆடுகிறார். முன்னர் அல்தாஃப் உசேனும் அதே விளையாட்டை விளையாடினார்.” என்று கூறினார்.

மேலும் நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவின் சொல்படியே நவாஸ் ஷெரீப் செயல்படுகிறார் என்றும் நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன் என்று இம்ரான் கான் கூறினார்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரதமர் இம்ரான் கான் மேலும், தனது அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றில் மிகச் சிறந்தவை என்று கூறி ராணுவத்திற்கு சாமரம் வீசவும் தவறவில்லை.

Views: - 40

0

0