பஸ்சுக்குள் உலா வந்த ‘சோம்பேறி’ ஸ்லாத்; டிரைவர் ஏன் கொண்டு வந்தார் தெரியுமா?

17 January 2021, 9:53 am
Quick Share

பிரேசிலில் பஸ் பயணத்தின் போது, ‘சோம்பேறி’ ஸ்லாத் உயிரினம், பஸ்சின் உட்கூரையில் தொங்கியபடி வர, அதனை போட்டோ எடுத்த பஸ் பயணிகள், சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலானது. பஸ்சுக்கில் அதனை டிரைவர் தான் கொண்டு வந்தாராம். அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள், அந்த டிரைவரை புகழ்ந்து வருகின்றனர்.

உலகின் மிகவும் சோம்பேறியான உயிரினமாக அறியப்படுகிறது ‘ஸ்லாத்’. நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை “அசையா”க் கரடி எனவும் அழைக்கிறார்கள். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உறங்குமாம்..

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பஸ்சுக்குள் ஸ்லாத் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், ரெசிப் என்ற நகரத்திலிருந்து சென்ற பஸ் ஒன்றில் இந்த ஸ்லாத் காணப்பட்டது. உட்புற மேற்கூரையில் அது தொங்கி கொண்டிருக்க, பஸ் பயணிகள் ஆச்சரியப்பட்டனர். அது எப்படி பஸ்சுக்குள் வந்தது தெரியுமா?

அந்த குறிப்பிட்ட பஸ்சில் டிரைவாக இருக்கும் ரொனால்டோ சந்தனா என்பவர் பயணத்தின் போது, சாலையை கடக்க முயன்ற ஸ்லாத்தை பார்த்து பஸ்சை நிறுத்தி உள்ளார். அது எப்படியும் சாலையை கடக்க பல மணி நேரம் ஆகும். அதற்குள் வாகனங்களால் அதன் உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் என நினைத்த அந்த நல்ல மனிதம், ஸ்லாத்தை பிடித்து பஸ்சுக்குள் கொண்டு வந்துவிட்டார். தொடர்ந்து அதனை மீண்டும் காட்டுக்குள் விட போலீசாரை அணுகி, ஸ்லாத்தை ஒப்படைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் பஸ் ஓட்டும் போது, ஏதோ அசைவதை கண்டேன். அதனை காப்பாற்ற எண்ணி பஸ்சுக்குள் கொண்டு வந்தேன். அதனை காப்பாற்ற, கடவுள் எனக்கு அளித்த வாய்ப்புக்காக நன்றி கூறுகிறேன்’’ என்றார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 11

0

0