தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து அமெரிக்க தேர்தல் வரை..! கமலா ஹாரிஸின் வியக்க வைக்கும் பின்னணி..!

16 August 2020, 1:57 pm
Kamala_Harris_UpdateNews360
Quick Share

2020’ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்க செனட்டர் கமலா ஹாரிஸ் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தொலைதூர கிராமம் திடீரென உலக அளவில் அனைவரும் தேடக்கூடிய இடமாக மாறியுள்ளது.

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பாட்டி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த் கிராமம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திடீரென உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள விவசாய கிராமமான பைங்கநாடு, திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடிக்கு அருகில் காவிரி டெல்டாவில் அமைந்துள்ளது.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமலா, பி.வி.கோபாலனின் மகள் ஆவார். அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். பின்னர் இந்திய அரசில் முக்கிய அதிகாரியாக இருந்தார்.

அவரது பாட்டி ராஜம் அருகிலுள்ள துளசெந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸின் மூதாதையர்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய போதிலும், அவர்கள் கிராமக் கோயிலுடனான தொடர்பை அப்படியே வைத்திருந்தனர். கோபாலன் மற்றும் அவரது குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் பல்வேறு காலகட்டங்களில் கோவில் புனரமைப்பிற்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

2014’ஆம் ஆண்டளவில், கமலா ஹாரிஸ் பெயரில் ஒரு நன்கொடை வழங்கப்பட்டதாக கோவில் அறங்காவலர் ரமணி கூறுகிறார். இந்நிலையில் அவரது வெற்றியை விரும்பும் வகையில் கிராமத்தில் டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிராமத்தினர், கோவில், அவரது மூதாதையர் வீடு மற்றும் கோவிலில் உள்ள தகடு ஆகியவற்றின் புகைப்படங்களை அப்பகுதி மக்கள் சமூக ஊடகங்களில் குடும்ப உறுப்பினர்கள் அளித்துள்ள நன்கொடைகள் பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், கடந்த செவ்வாயன்று 55 வயதான கமலா ஹாரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். இதன் மூலம் ஒரு பெரிய கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முதல் வெள்ளையினம் அல்லாத பெண்ணாக அவர் வரலாறு படைத்தார்.

கமலா ஹாரிஸின் தந்தை, ஜமைக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்கர் மற்றும் தாய் இந்தியர். தற்போது கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க செனட்டராக உள்ளார்.

Views: - 11

0

0