ஆப்கான் தலைநகருக்குள் நுழைந்த தலிபான்கள்: அதிகார மாற்றத்திற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்..!!

Author: Aarthi Sivakumar
15 August 2021, 3:45 pm
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் ஆயுதங்களுடன் தலிபான்கள் நுழைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான் 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டது. அதன்பின், ஆப்கனில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத்தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர்.

தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர்.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தலிபான்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலிபான்கள் நுழைந்து இருப்பதாக காபூலில் வசிக்கும் மக்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறியுள்ளனர். அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், ஆப்கன் அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் தலைமை அலுவலர் வெளியிட்ட டுவிட் பதிவில், யாரும் அச்சப்பட வேண்டும், காபூல் பாதுகாப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Views: - 238

0

0