உண்ணி மூலம் பரவும் புதிய வைரஸ்..! 7 பேர் பலி..! திணறும் சீனா..!

7 August 2020, 10:53 am
tick_borne_updatenews360
Quick Share

உண்ணிகள் மூலம் பரவும் வைரஸால் ஏற்பட்ட ஒரு புதிய தொற்று நோய், சீனாவில் ஏழு பேரைக் கொன்றுள்ளது மற்றும் 60 பேரைத் தொற்றியுள்ளது என்று சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37’க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டின் முதல் பாதியில் எஸ்.எஃப்.டி.எஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது என அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டினார். இதையடுத்து அவரது உடலின் உள்ளே லுகோசைட், ரத்த பிளேட்லெட் சரிவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வைரஸ் காரணமாக அன்ஹுய் மற்றும் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எஸ்.எப்.டி.எஸ் வைரஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல எனக் கூறப்படுகிறது. 2011’ஆம் ஆண்டில் சீனா இந்த வைரஸின் நோய்க்கிருமிகளை தனிமைப்படுத்தியுள்ளது. மேலும் இது புன்யா வைரஸ் வகையைச் சேர்ந்தது.

வைரஸ் வல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவியிருக்கலாம் என்றும் வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடும் என்றும் நம்புகின்றனர்.

ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட முதல் மருத்துவமனையின் மருத்துவர் ஷெங் ஜிஃபாங், மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பை விலக்க முடியாது என்று கூறினார். நோயாளிகளின் இரத்தம் அல்லது சளி வழியாக மற்றவர்களுக்கு வைரஸை பரவ வாய்ப்புள்ளது என அவர் மேலும் கூறினார்.

உண்ணி கடி என்பது முக்கிய பரிமாற்ற பாதை என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Views: - 15

0

0