பாகிஸ்தான் கடற்படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு..! இரண்டு வீரர்கள் பலி..!

7 March 2021, 5:29 pm
Gun_UpdateNews360
Quick Share

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடலோர மாவட்டமான குவாடரில் அடையாளம் தெரியாத துப்பாக்கியேந்திய நபர்கள், பாதுகாப்பு படையினரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு வீரர்கள் பலியானதோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் கடற்படை வாகனம் நேற்று குவாடர் மாவட்டத்தில் உள்ள கன்ஸில் இருந்து ஜெவ்னி வரை பயணித்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்த கடற்படை வீரர்கள் சோஹைல், ஒரு மாலுமி, மற்றும் முடிதிருத்தும் நோமன் என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த உடனேயே, பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குவாடரின் உதவி கமிஷனராக உள்ள ஓய்வுபெற்ற கேப்டன் அதர் அப்பாஸ், “தாக்குதல் நடந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாகாணத்தின் சிபி அருகே தந்தோரி பகுதியில் சாலையோர குண்டு வெடித்ததில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

60 பில்லியன் அமெரிக்க டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடாரின் திட்டங்களின் மையமாக விளங்கும் பலுசிஸ்தானில் உள்ள மற்ற மாகாணங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை பலூச் போராளிகள் தொடர்ந்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0