வரலாறு காணாத உணவுப் பஞ்சம்.. தவிக்கும் பாகிஸ்தான் மக்கள் : கோதுமை லாரியை துரத்தி செல்லும் காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 7:20 pm
Pakistan Wheat - Updatenews360
Quick Share

உணவுப் பொருட்களுக்காகவும், சப்பாத்தி துண்டுகளுக்காகவும் மனிதர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் கோரக்காட்சிகள் பாகிஸ்தானில் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது.

தொடர்ந்து இவ்வாறு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உணவு தானியங்களை இறக்குமதி செய்ததால் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறையத் தொடங்கியது. இது ஒருபுறம் இருக்க, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அரசுநிறுத்திக் கொண்டது. இதுவும் பாகிஸ்தானின் இறக்குமதி செலவு அதிகரிக்க முக்கிய காரணமாக மாறியது. இதனால் பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 3 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை தொட்டு வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்காகவும், மண்ணெண்ணைக்காகவும் மக்கள் வீதிகளில் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு நகரில் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை நூற்றுக்கணக்கான மக்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டம் துரத்துவதால் என்ன செய்வதென அறியாத ஊழியர்கள், மக்களிடம் இருக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுப்பதை பார்க்க முடிகிறது.

Views: - 644

0

0