“லடாக்கை நாங்க எப்போ அங்கீகரிச்சோம்”..! சீனா மீண்டும் அடாவடி..!

29 September 2020, 5:09 pm
Wang_Wenbin_Chinese_EAM_Spokesperson_Updatenews360
Quick Share

தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வரும் சீனா மீண்டும் எல்லை தகராறின் மத்தியில் இந்தியாவைத் தூண்டிவிடும் முயற்சியாக, புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை அது அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தை சட்டவிரோதமாக நிறுவியதாகவும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதை எதிர்ப்பதாகவும் கூறினார்.

லடாக் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக 2019 வரை இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநிலத்தை பிரித்தது. இந்த பிளவு அக்டோபர் 31, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் தேசிய ஒற்றுமை தினமாக குறிக்கப்படுகிறது.

“இந்தியா சட்டவிரோதமாக நிறுவிய லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா என்றும் அங்கீகரிக்கவில்லை. இராணுவ கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தையும் சீனா எதிர்க்கிறது” என்று செய்தித் தொடர்பாளர் வாங் கூறினார்.

“சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி, இரு தரப்பினரும் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இதனால் நிலைமையை எளிதாக்குவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.” என்று வாங் மேலும் தெரிவித்தார்.  

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சீனாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல், இந்தியா சீனா மீது திடீர் தாக்குதல் தொடுக்கலாம் என அந்நாட்டு ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே யுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள இந்தியா எல்லைகளில் மிகப்பபெரிய அளவில் படைக்குவிப்பை மேற்கொள்வதால், ஒரு குறுகிய கால போருக்கு இந்தியா தயாராகிறதோ எனும் எண்ணம் பாதுகாப்பு வட்டாரங்களில் உள்ளது.

Views: - 11

0

0