சீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா..! ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..! பின்னணி என்ன..?

18 April 2021, 1:26 pm
Joe_Biden_Xi_Jinping_UpdateNews360
Quick Share

உலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்க உலகத் தலைவர்களின் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனாவுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வாரம் ஷாங்காயில் இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் போது காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி மற்றும் சீன பிரதிநிதி ஜீ ஜென்ஹுவா ஆகியோர் இந்த உடன்பாட்டை எட்டியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அமெரிக்காவும் சீனாவும் காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளன. அவை கோரும் தீவிரத்தன்மை மற்றும் அவசரத்துடன் கவனிக்கப்பட வேண்டும்” என்று கூட்டு அறிக்கை கூறியுள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் உலகின் முதலிரண்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளாகும். இவை வளிமண்டலத்தை வெப்பமயமாக்கும் புதைபடிவ எரிபொருள் புகைகளில் பூமியின் கிட்டத்தட்ட பாதியை தங்கள் நாடுகளில் இருந்து மட்டும் வெளியேற்றுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளின் வெற்றிக்கு சீனர்களின் ஒத்துழைப்பு முக்கியமானது என பிடென் நிர்வாகம் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் தைவான் மற்றும் தென்சீனக் கடல் ஆகியவற்றுக்கான சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் தொடர்பான உறவுகள் இத்தகைய முயற்சிகளை பின்னோக்கிச் தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் கெர்ரியின் ஷாங்காய் பயணம் ஜனவரி மாதம் பிடென் பதவியேற்றதிலிருந்து ஒரு அமெரிக்க அதிகாரி சீனாவிற்கு மேற்கொண்ட மிக உயர்ந்த பயணத்தை குறித்தது. ஷாங்காயில் இருந்து, முன்னாள் வெளியுறவு செயலாளர் கெர்ரி பின்னர் தென் கொரியாவுக்கு பேச்சுவார்த்தைக்காக பறந்தார்.

ஏப்ரல் 22-23 உச்சிமாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 40 உலகத் தலைவர்களை பிடென் அழைத்திருக்கிறார். அமெரிக்காவும் பிற நாடுகளும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான அதிக லட்சியமான தேசிய இலக்குகளை கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வளரும் நாடுகளின் காலநிலை முயற்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தது.

கெர்ரியின் சீனா வருகை காலநிலை பிரச்சினைகளில் அமெரிக்க-சீனா ஒத்துழைப்பை எவ்வளவு ஊக்குவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சீனாவுடன் நேரடியாக அமெரிக்கா கரம் கோர்க்கும் இந்த முடிவு உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

Views: - 38

0

0