தைவான் எல்லைக்குள் மிகப்பெரும் அத்துமீறலை நிகழ்த்திய சீனா..! அமெரிக்கா கடும் கண்டனம்..!

24 January 2021, 12:04 pm
tsai_biden_xi_updatenews360
Quick Share

எட்டு சீன குண்டுவீச்சு விமானங்களும் நான்கு போர் விமானங்களும் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் தென்மேற்கு மூலையில் நேற்று நுழைந்து அத்து மீறியதாக தைவான் தெரிவித்துள்ளது. மேலும் தைவானின் விமானப்படை ஊடுருவலை கண்காணிக்க ஏவுகணைகளை அனுப்பியது என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவானை தனது சொந்த பிரதேசமாகக் கூறும் சீனா, சமீபத்திய மாதங்களில் தைவானின் தெற்குப் பகுதிக்கும், தென் சீனக் கடலில் உள்ள தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட தினசரி விமானப்படை விமானங்களை அனுப்பி வருகிறது.

இருப்பினும் அவை பொதுவாக ஒன்று அல்லது இரண்டு உளவு விமானங்களைக் கொண்டிருந்தன.

இந்நிலையில், பல சீன போர் விமானங்கள் குறிப்பாக எட்டு அணுசக்தி திறன் கொண்ட எச் -6 கே குண்டுவீச்சு மற்றும் நான்கு ஜே -16 போர் விமானங்கள் கொண்ட குழு தைவான் வான்பரப்பு மீது பறப்பது அசாதாரணமானது.

இதற்கிடையே தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஒரு வரைபடம், ஒய் -8 நீர்மூழ்கி எதிர்ப்பு விமானத்தையும் உள்ளடக்கிய சீன விமானமும், அதே பகுதியில் பறந்து செல்வதை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தைவான் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகள் தைவானிலிருந்து சற்று விலகியிருக்கும் நிலையில், சீனா தற்போது பிரதாஸ் தீவுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.

எனினும் இந்த விவகாரத்தில் சீனாவிலிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை. கடந்த காலங்களில், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, சீனாவின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு கடும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளது.

Views: - 0

0

0