அமெரிக்கா இனவெறி கொண்ட நாடு அல்ல..! ஜோ பிடெனை விமர்சித்து இந்திய வம்சாவளி நிக்கி ஹேலி அதிரடி..!

25 August 2020, 1:42 pm
Nikki_Haley_UpdateNews360
Quick Share

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் (ஆர்.என்.சி) முதல் நாளில், ​​ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், இந்திய-அமெரிக்க அரசியல்வாதியுமான நிக்கி ஹேலி நவம்பர் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு குடிமக்களை வலியுறுத்தியதோடு, அமெரிக்காவை இனவெறி நாடு என அழைக்கும் நாகரீகமற்ற கருத்துக்களுக்காக ஜனநாயகக் கட்சியை விமர்சித்துள்ளார்.

கலிஃபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின மற்றும் இந்திய வம்சாவளி பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, நேற்று இரவு மற்றொரு இந்திய வம்சாவளியான ஹேலியின் உரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது உரையில், முன்னாள் தென் கரோலினா கவர்னரான ஹேலி, “ஜனநாயகக் கட்சியின் பெரும்பகுதியினர், அமெரிக்கா இனவெறி கொண்டது என்று சொல்வது இப்போது வழக்கமான ஒன்றாகி உள்ளது” என்று கூறினார்.

தனது சொந்த தென் கரோலினா போன்ற மாநிலங்கள் எவ்வாறு இனவெறி வன்முறையிலிருந்து எவ்வாறு எழுந்தன என்பதை அவர் விவரித்தார். மேலும் அமெரிக்கா ஒரு இனவெறி நாடு அல்ல என்றும் கூறினார்.

இனவெறி என்ற கருத்தை மறுப்பது இந்த வாரம் முழுவதும் ஆர்.என்.சி மேடையில் பேசப்படும் முக்கிய செய்திகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அமெரிக்கா ஒரு இனவெறி நாடு அல்ல. இது எனக்கு தனிப்பட்டது. நான் இந்திய குடியேறியவர்களின் பெருமை வாய்ந்த மகள். எனது பெற்றோர் ஒருபோதும் குறைகளையும் வெறுப்பையும் கொடுக்கவில்லை. என் தந்தை தலைப்பாகை அணிந்திருந்தார். நான் கருப்பு மற்றும் வெள்ளை உலகில் பழுப்பு நிற பெண்.” என ஹேலி மேலும் கூறினார்.

சார்லஸ்டனில் உள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கருப்பினரின் தேவாலயத்தில் ஒரு வெள்ளை மனிதர் 2015’ஆம் ஆண்டு ஒன்பது பைபிள் படிப்பு பங்கேற்பாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை ஹேலி நினைவு கூர்ந்து ஜனநாயகக் கட்சியினரை விமர்சித்தார்.

குடியரசுக் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக ஹேலி காணப்படுகிறார். மேலும் 2024 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் பிரதான வேட்பாளராக இருப்பார் எனும் எதிர்பார்ப்பு உள்ளது.

டிரம்பிற்கும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும் “எனது ஆதரவு இருக்கிறது” என்று நேற்று இரவு அவர் கூறினார்.

தனது உரையில், அவர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனின் பிரச்சாரத் திட்டங்களை, அராஜகம், கலவரங்கள் மற்றும் கலாச்சார எதிர்ப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டின் எதிர்காலத் திட்டங்கள் என்று விரிவாக விவரித்தார்.

டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெறாவிட்டால், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த கடுமையான எச்சரிக்கைகளுடன் குடியரசுக் கட்சியினர் மாநாட்டைத் தொடங்கினர். அவரை மத சுதந்திரத்தின் பாதுகாவலர், ஆயுதங்களைத் தாங்கும் உரிமை, சுயாதீன சிந்தனை, பேச்சு சுதந்திரம் மற்றும் பலவற்றுக்கு அடையாளமாக குடியரசுக் கட்சியினர் முன்னிறுத்துகின்றனர்.

நிக்கி ஹேலியின் பேச்சை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், கமலா ஹாரிஸ் மற்றும் நிக்கி ஹேலி இருவரும் தங்கள் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்வது அமெரிக்க அரசியலில் இந்திய-அமெரிக்கர்களின் ஆதிக்கத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது.

ஏற்கனவே, 2024’ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளிகளான கமலா ஹாரிஸ் மற்றும் நிக்கி ஹேலி அதிபர் வேட்பாளராக களமிறங்குவது குறித்த விவாதம் கலைக்கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமித்தபோது அமெரிக்க அமைச்சரவையில் பணியாற்றிய முதல் இந்திய-அமெரிக்கர் ஹேலி ஆவார்.

குடியரசுக் கட்சியின் நட்சத்திரமான இவர், 2018’ஆம் ஆண்டின் இறுதியில் பதவியை விட்டு வெளியேறி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2024’இல் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் லெகர் நடத்திய கருத்துக் கணிப்பில், 2024’ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியினரை கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்வதில் 11 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பென்ஸுக்குப் பின்னால் 31 சதவீதமும், ஜனாதிபதியின் மகன் ஜூனியர் டொனால்ட் டிரம்ப் 17 சதவீதமும் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

Views: - 1

0

0