காஷ்மீர் குறித்த வீடியோ வெளியீடு..! இந்தியாவுக்கு எதிராக டிஜிட்டல் போரில் குதித்துள்ளதா துருக்கி..?

26 August 2020, 7:19 pm
Erdogan_Imran_UpdateNews360
Quick Share

துருக்கி பாகிஸ்தானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்து வருகிறது. கராச்சியில் ஒரு பீரங்கி கட்டுவதாகட்டும் அல்லது பாகிஸ்தான் கடற்படைக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு போர்க்கப்பல்கள் கட்டும் தற்போதைய சூழலில் துருக்கி எப்போதும் உடன் உள்ளது. இரு நாடுகளும் அமெரிக்காவின் எஃப் 16 போர் விமானத்தை கொண்டிருக்கும் சூழ்நிலையில் பல்வேறு மட்டங்களில் ஒத்துழைப்பு தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு இஸ்லாமிய நாடுகள் உட்பட உலக நாடுகள் அனைத்தும் செவிசாய்க்காத நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனும், அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக் கூறினர்.

இந்நிலையில் மகாதீரை வீட்டுக்கு அனுப்பியதால் மலேசியாவிலிருந்து தற்போது எந்தவித எதிர்ப்புக்குரல்களும் எழவில்லை. மேலும் தற்போது அரபுலகம் ஒட்டுமொத்தமும் பாகிஸ்தானை கைகழுவி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆபத்பாந்தவனாக சீனாவும் துருக்கியும் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் அமீர்கான் துருக்கி அதிபரின் மனைவியான எமின் எர்டோகனை சந்தித்த போது, துருக்கி குறித்த சிந்தனைகள் இந்திய அரசு வட்டாரங்களில் விவாதப் பொருளானது.

இப்போது, யூடியூப்பில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக 3 நிமிட 15 விநாடி வீடியோ ஒன்று துருக்கியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. “படுகொலை,” “முடிவற்ற சித்திரவதை” மற்றும் “மரணம்” போன்ற சொற்கள் அந்த வீடியோவின் அனைத்து பிரேம்களிலும் தவறாமல் வருகின்றன. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிடப்பட்ட நிலையில் அந்த வீடியோ இஸ்லாமியர்களிடையே அதிவேகமாக பரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய துருக்கியின் அதிபர் எர்டோகனுக்கு பண்டைய துருக்கிய காலிபா ஆட்சியாளர்கள் மற்றும் ஓட்டோமான் பேரரசை மீண்டும் ஸ்தாபிப்பது குறித்து சிந்தனை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஒரு வாய்ப்பாக இந்த வீடியோ மூலம் இந்தியாவுக்கு எதிரான தகவல்தொழில்நுட்ப போரை துருக்கி முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Views: - 40

0

0