மியான்மரில் ராணுவ புரட்சிக்கு மத்தியில் நடனம் ஆடிய பெண்: வைரல் வீடியோ!

3 February 2021, 9:00 am
Quick Share

மியான்மர் நாட்டில், ராணுவ புரட்சி ஏற்பட்டு, பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள சமயத்தில், அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடம் முன், இளம்பெண் ஒருவர், ஹாயாக ஏரோபிக்ஸ் நடனம் ஆடி, அந்த வீடியோவை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில், ‘ட்ரெண்ட்’ ஆக பரவி வருகிறது.

மியான்மரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டு அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. மேலும் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கிங் ஹின் வாய் என்ற பெண் ஒருவர், அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடம் முன்பு ஹாயாக ஏரோபிக்ஸ் நடனம் ஆடி, அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அப்பெண் நடனம் ஆடும் போது, அவருக்கு பின்புறம் ராணுவ வாகனங்கள் பாராளுமன்றம் நோக்கி அணிவகுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. ஆனால் எவ்வித பதற்றமும் அடையாத அந்த பெண், நடனம் ஆடி உள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணிடம் கேட்டபோது, ‘பிட்னஸ் போட்டி ஒன்றிற்காக இந்த வீடியோவை எடுத்தேன். நான் காலை செய்தி பார்க்கவில்லை. பின்பு தான் அவசர நிலை பிரகடனப்படுத்தியது தெரியவந்தது’ என்று விளக்கமளித்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதனை டுவிட்டர் பயனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர, அந்த வீடியோ வேகமாக பிரபலம் அடைந்தது.

ஆதித்ய ராஜ் கவுல் என்பவர் பகிர்ந்த அந்த வீடியோவை இதுவரை டுவிட்டரில், 18.6 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 17.6 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர்.

Views: - 18

0

0