பிலிப்பைன்சில் வெடித்து சிதறும் எரிமலை: பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம்..!!

2 July 2021, 2:15 pm
Quick Share

மணிலா: பிலிப்பைன்சில் தால் எரிமலை வெடித்துச் சிதறியதால் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரியதும், சிறியதுமான பல எரிமலைகள் உள்ளன. இதில் மிகவும் உயிர்ப்புடன் உள்ளதால் எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது.


தால் ஏரியில் அமைந்துள்ள இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை காரணமாக தலைநகரம் மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வானம் புகைமூட்டமாக காட்சியளித்தது. இது கடும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்து, வெடித்துச் சிதறியது. தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கி.மீ., உயரத்துக்கு வாயுவும் நீராவியும் வெளியேறி வருகிறது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

ஊரை விட்டு பொதுமக்கள் வெளியேறியவண்ணம் உள்ளனர். ஏற்கனவே சிலர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தால் எரிமலை 100 ஆண்டுகளுக்கு முன் வெடித்தபோது 1,300க்கும் அதிகமானோர் பலியாகினர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த எரிமலை வெடித்து சிதறியது. அப்போது 15 கி.மீ., உயரத்திற்கு சாம்பல் பரவியதுடன் லாவா குழம்பும் வெளியேறியது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 1.35 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டை விட இம்முறை அதன் வெடிப்பு மேலும் கடுமையாக இருக்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

Views: - 179

0

0