இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: 13 உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
5 December 2021, 5:38 pm
Quick Share

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று எரிமலை வெடித்துச் சிதறி கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்தது. ஒரு பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

இந்நிலையில் எரிமலை வெடிப்பிற்கு அருகேயிருந்த வீடுகள் சேதமடைந்தன. பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது. இதில், தீக்காயம் பட்டு 13 பேர் உயிரிழந்த நிலையில் மற்ற நபர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. எரிமலை சாம்பலுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் ஒரு கிராமம் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்துள்ளது. எரிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகளிலும் கட்டடங்களிலும் வாகனங்களிலும் எரிமலை சாம்பல் படிந்து காணப்படும் நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழையும் பெய்துள்ளதால் எரிமலை சாம்பலில் நீர் கலந்து அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

Views: - 434

0

0