இந்தியாவின் “ஆரோக்ய சேது” செயலியை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

By: Sekar
13 October 2020, 12:34 pm
WHO_Director_General_UpdateNews360
Quick Share

கொரோனா பெருந்தொற்றின் போது குடிமக்களைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசு அறிமுகப்படுத்திய மொபைல் செயலியான ஆரோக்ய சேதுவை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து, ஆரோக்கியமாக இருக்க சிறந்த நடைமுறைகள் மற்றும் தொற்றுநோயுடன் தொடர்புடைய மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரிவிக்க இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

செயலியின் சில முக்கிய அம்சங்கள் புளூடூத்தைப் பயன்படுத்தி தானியங்கி தொடர்புத் தடமறிதல், ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட சுய மதிப்பீட்டு சோதனை, பயனரின் ஆபத்து நிலை, புதுப்பிப்புகள் மற்றும் கொரோனா தொடர்பான ஆலோசனை மற்றும் நடைமுறைகள், புவி இருப்பிட அடிப்படையிலான கொரோனா புள்ளிவிவரங்கள் ஆகியவை அடங்கும். 

நாடு தழுவிய கொரோனா புள்ளிவிவரங்கள், அவசர கொரோனா ஹெல்ப்லைன் தொடர்புகள், கொரோனா சோதனை வசதிகளுடன் கூடிய ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியல், 12 மொழிகளுக்கான ஆதரவுடன் மின்-பாஸ் ஒருங்கிணைப்பு போன்ற வசதிகள் இதில் உள்ளன.

முன்னதாக செப்டம்பர் மாதத்தில், இந்த செயலி அனைத்து அம்சங்களிலும் மிகவும் வெளிப்படைத்தன்மையை பராமரித்து வருவதாக அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு உறுதியளித்தது. இந்த செயலி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்ய சேது உலகின் மிகப்பெரிய கொரோனா தொடர்பு தடமறிதல் செயலியாகும். இது 15.71 கோடிக்கு மேற்பட்ட பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நகர பொது சுகாதாரத் துறைகள் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிந்து சோதனைகளை விரிவுபடுத்த இது உதவியது என்று கூறினார்.

“இந்தியாவில் இருந்து ஆரோக்ய சேது செயலி 150 மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹாட்ஸ்பாட்டாக எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும், இலக்கு வழியில் சோதனையை விரிவுபடுத்தவும் நகர பொது சுகாதார துறைகளுக்கு இது உதவியுள்ளது” என்று டாக்டர் டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Views: - 44

0

0