அதிபர் தேர்தலில் பிடென் வெற்றி..! உலகத் தலைவர்களிடமிருந்து குவியும் பாராட்டுக்கள்..!

8 November 2020, 8:02 am
Joe_Biden_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வென்ற செய்தி வெளியாகிய உடன், உலகத் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளை பரிமாறத் தொடங்கியுள்ளனர்.

பிடென் நேற்று தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான போட்டியில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார். பென்சில்வேனியாவில் பெற்ற வெற்றி பிடென் அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக மாறுவதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஜோ பிடென் வெற்றி வெளியானவுடன் முதலில் வாழ்த்திய உலக தலைவர் அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “வாழ்த்துக்கள், ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ். நம் இரு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளர்கள். உலக அரங்கில் தனித்துவமான ஒரு உறவை நாம் பகிர்ந்து கொள்கிறோம். இந்த இரண்டையும் உங்களுடன் இணைந்து மேலும் வளர்த்தெடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி, ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தினார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வலுவான உறவு உலகிற்கு தேவை, குறிப்பாக இந்த கடினமான காலங்களில் இது அவசியம். கொரோனா, காலநிலை போன்ற முக்கியமான விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடனின் வெற்றிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கர்கள் தங்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வாழ்த்துக்கள் ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ்! இன்றைய சவால்களை சமாளிக்க நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்றாக வேலை செய்வோம்!” என இம்மானுவேல் மெக்ரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0

1 thought on “அதிபர் தேர்தலில் பிடென் வெற்றி..! உலகத் தலைவர்களிடமிருந்து குவியும் பாராட்டுக்கள்..!

Comments are closed.