8ம் வகுப்பு மாணவிக்கு காதல்வலை விரித்த ஆசிரியர்… கடத்திச் சென்று தனியாக வசித்து வந்த சம்பவம்… குண்டர் சட்டத்தில் கைது!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 1:01 pm
Quick Share

தருமபுரி : தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி அருகே ஸ்ரீராம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து 13 வயது மாணவியை கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்கின்ற ஆங்கில ஆசிரியர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், கோம்பூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர். அப்போது, அயோத்தியபட்டினம் பகுதியில் குற்றப்பிரிவு காவலர்கள் உதவியுடன் மொரப்பூர் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், ஆங்கில ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினிக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 493

0

0