Master25Days: கேக் வெட்டி கொண்டாடிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

6 February 2021, 8:49 pm
Quick Share

மாஸ்டர் படம் வெற்றிகராக 25ஆவது எட்டியுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கார்த்தியின் கைதி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாஸ்டர் படத்தின் மூலமாக தளபதி விஜய் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும், குடும்ப பெண்களையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து பெருமை சேர்த்தார் என்று கூட சொல்லலாம். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா,

சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், நாசர், கேபிஒய் தீனா, பிரிகிதா, கௌரி கிஷான், யூடியூப் பிரபலங்கள் என்று ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படமும் உலகம் முழுவதும் வெளியாகி சாதனை படைத்தது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படம் வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் ஈட்டியது. தற்போது வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில்,

மாஸ்டர் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதோடு, தமிழகத்தில் மட்டும் ரூ.141 கோடி வரையில் வசூல் செய்துள்ளது. மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டதைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகி அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், மாஸ்டர் படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெற்றி திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அதோடு, ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்து, தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். விஜய், தனது அலுவலகத்திற்கு வருகை தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0