பாடகர் கே.கே.வின் உயிரிழப்புக்கு இதுதான் காரணமா…? போலீஸூக்கு எழுந்த சில சந்தேகங்கள்… திசை மாறும் விசாரணை!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
1 June 2022, 2:46 pm
Quick Share

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் உயிரிழப்பு குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். காதல் மற்றும் கானா பாடல்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர், தமிழில், காதலிக்கும் ஆசையில்லை (செல்லமே), ஸ்டிராபெர்ரி கண்ணே (மின்சாரக் கனவு) உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

நேற்று கொல்கத்தா நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடினார். பின்னர், இரவு 10.30 மணியளவில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற கே.கே., நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உயிரிழப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேளையில், கே.கே.வின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

இதனிடையே, கல்லூரி நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட விதிமீறல்களே கே.கே.வின் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழத் தொடங்கியுள்ளது.

அதாவது, நஸ்ருல் மஞ்சாவில் கடந்த இரு தினங்களாக கல்லூரி மாணவர்களுக்காக பாடகர் கிருஷ்ண குமார் குன்னத் நிகழ்ச்சி நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. முதல் நாளிலேயே நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், இதனால், தனக்கு வியர்த்து கொட்டி வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கே.கே. புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகாரை அவர்கள் அலட்சியப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, அவர் தனது அசாதாரண சூழலை புரிந்து கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு கொண்டிருந்ததாகவும், ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், வெறும் 2,200 பேர் அமரும் விதமாக இருக்கும், மூடிய வகையில் இந்த ஆடிட்டோரியத்தில் 5,000க்கும் அதிகமானோரை அனுமதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, கே.கே.வுக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும், உச்சகட்டமாக, நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, ஆடிட்டோரியத்தில் இருந்த மாணவர்களில் சிலர், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் fire extinguisher-ஐ அடித்து விளையாடியுள்ளனர். இதுவும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஆடிட்டோரியத்தை விட்டு அவர் வெளியேறும் போது, அவரது முகத்தில் அசவுகரியம் இருந்தது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களினால் திரையுலக பிரபலத்தின் உயிரே பறிபோய் விட்டதாகவும், எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கே.கே.வின் உயிரிழப்பு குறித்து பல்வேறு விதமான தகவல் வெளியாகி வரும் நிலையில், போலீசார் அதனடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Views: - 705

0

0