கவனத்தை திசை திருப்பிய விஜய் சேதுபதி: Next Movie Gandhi Talks டைட்டில் அறிவிப்பு!

16 January 2021, 4:03 pm
Vijay Sethupathi - Updatenews360
Quick Share

தனது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில், தான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். மிகவும் எளிமை, நேர்மையான குணம், ரசிகர்களை மதிக்கும் மனம் படைத்தவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை மறுக்காமல் ஏற்று நடிப்பவர். உதாரணத்திற்கு, திருநங்கையாக நடித்துள்ளார். நானும் ரௌடி தான், சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன், பேட்ட என்று மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளார்.

மாஸ் ஹீரோ என்ற கெத்து, தெனாவட்டு இல்லாமல், சிறப்புத் தோற்றத்திலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வெளியிடுவார். இவ்வளவு ஏன், ரஜினிகாந்திற்கு வில்லனாகவும் நடித்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்யை விட விஜய் சேதுபதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு, அப்டேட்நியூஸ்360 (UpdateNews360) சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்னதாக, தனது அலுவலகத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். எனினும், மேற்கொண்டு அவரது இந்த செயல் விவாதத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் நிலையில், அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை இன்று அறிவித்துள்ளார். அதன்படி, படத்திற்கு காந்தி டாக்ஸ் (Gandhi Talks) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதோடு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் 108 வருடத்தை கொண்டாடுகிறது. இந்திய சினிமாவின் முன்னோடு ஸ்ரீ தாதாசாகேப் பால்கேவை கௌரவிக்கும் வகையில், இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் ரூ.500, ரூ.100 நோட்டுகள் இடம் பெற்றிருப்பது போன்றும், விஜய் சேதுபதி ஒரு பக்கமாக தலையை சாய்த்திருப்பது போன்றும் இருக்கும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் ரூபாய் நோடுகளை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, மலையாளம் ஆகிய 6 மொழிகளில் உருவாகும் காந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பாண்டுரங்க் பெலெகர் இயக்குகிறார். மூவி வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தவிர விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், மும்பைகார், இடம் பொருள் ஏவல், தீபக் சுந்தர்ராஜனின் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம், 19 (1) (a) என்று ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

Views: - 8

0

0