மகள் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு…அழகுகலை நிபுணர் மீது புகாரளித்த தாய்: நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் தர்ணா..!!

Author: Rajesh
2 May 2022, 5:32 pm
Quick Share

திருச்சியில் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பிய பியூட்டிஷியன் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரிதா பேகம். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். பரிதா பேகத்தின் தம்பி முகமதுரபிக். இவரது மனைவி ரேஷ்மா ஹசின் (29). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு ரேஷ்மாஹசின் தில்லை நகரில் ஹஸ்சி பிரைடல் மேக்கப் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்போது பரிதாப பேகத்தின் மகள் அவரது பியூட்டி பார்லரில் வேலையில் உதவி செய்வதற்காக அடிக்கடி சென்று வந்தார். அப்போது ரேஷ்மாஹாசின் ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

ஒரு முறை பரிதா பேகத்தின் மகளை அவர் அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த விஷயங்கள் பிடிக்காததால் அங்கிருந்து வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது ரேஷ்மா ஹசின் பியூட்டி பார்லரை மூடிவிட்டு ஃபேஷன் ஷோ போன்றவற்றிற்கு மேக்கப் செய்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொலைபேசி மூலம் ரேஷ்மாஹசின், பரிதாபேகத்தை மிரட்டியுள்ளார். அவர் குறித்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து ஜனவரி மாதத்தில் பரிதா பேகத்தின் மகள் குறித்து தவறான தகவல்களை வாட்ஸ் அப்பில் ரேஷ்மாஹசின் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில ஆடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் இது குறித்து தமிழக டிஜிபிக்கு பரிதா பேகத்தின் மகள் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் உதவி ஆணையர் உத்தரவின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் புனிதவல்லி வழக்கு பதிவு செய்தார். வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்களாகியும் குற்றம் சாட்டப்பட்ட ரேஷ்மாஹசினிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. இதை கண்டிக்கும் வகையில் இளம்பெண் தனது குடும்பத்தாருடன் இன்று அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உதவி ஆணையரிடம் அவர் அளித்த புகார் மனுவை பெரிய அளவிலான பேனர் செய்து கையில் வைத்துக்கொண்டு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோட்டை காவல் நிலையம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 579

0

0