கள்ளச்சந்தையில் மது அருந்திய திமுக பிரமுகர் பலி: மற்றொரு பிரமுகருக்கு பார்வை பறிபோனது…கோவையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
27 April 2022, 11:31 pm
Quick Share

கோவை: தெலுங்குபாளையத்தில் கள்ளச்சந்தையில் வாங்கிய மது அருந்திய திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 76வது வார்டு திமுக துணை செயலாளராக உள்ளார்.

நேற்று காலை 11.45 மணி அளவில் இவர் அதே பகுதியை சேர்ந்த திமுக வார்டு செயலாளர் சிவா (47) என்பவருடன் சேர்ந்து பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர். அங்கே பதுக்கி வைத்து விற்பனை செய்த மது பாட்டிலை வாங்கினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை மதுவில் கலந்து இருவரும் குடித்தனர். அப்போது தண்ணீர் கசப்பாக இருந்துள்ளது.

இதனையடுத்து பார் ஊழியர்களிடம் தண்ணீர் கசப்பாக உள்ளது ஏன் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. சிறிது நேரத்தில் சண்முகத்திற்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.அரை மணி நேரம் கழித்து சிவா பலமுறை வாந்தி எடுத்துள்ளார். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சண்முகம் பரிதாபமாக இறந்தார். சிவா கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சண்முகத்தின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்குபாளையம் மதுபானகடை பாரில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த திமுக பிரமுகர் பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 622

0

0