நகை வியாபாரியிடம் 6 கிலோ நகை, ரூ.14 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கு : வடமாநில இளைஞர்கள் இருவர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 10:02 pm
Thanjai Theft Arrest - Updatenews360
Quick Share

தஞ்சை : தஞ்சை இணையம் அருகே உணவகத்தில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ நகைகள் மற்றும் ரூ. 14 லட்சம் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 55). சென்னையில் உள்ள நகைகள் மொத்த வியாபாரியிடம் பணியாற்றி வரும் இவர் பல ஊர்களுக்கும் சென்று கடைகளில் நகைகள் விற்பனை செய்து வருகிறார்.

அப்போது இவர் விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. இது போல, தஞ்சாவூருக்கு நகைகளை விற்பதற்காக கடந்த மே 31ம் தேதி இரவு நகைகள் கொண்ட பையுடன் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹோட்டலில், உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுப்பதற்காக பையை கீழே வைத்தார்.

பணம் கொடுத்த பிறகு கீழே பார்த்தபோது பை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும், 14 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதற்கிடையில், கொள்ளை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரே மாதிரி வெள்ளை நிற சட்டை அணிந்த 9 நபர்கள், மணியின் பையை துாக்கிக் கொண்டு வேகமாக நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்த நிலையில், தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த தானாஜி பாபு சுக்லி (வயது 32), கார்மலா பகுதியை சேர்ந்த பாண்டுரங் பாபு துகில் (வயது 45), என்ற இருவரையும் பிடித்த போலீசார், கடந்த 19ம் தேதி தஞ்சாவூருக்கு கொண்டு விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிடிப்பட்ட இருவர்களிடம் நகை எதுவும் சிக்கவில்லை. இன்னும் மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 478

0

0