காந்தியை கொன்றவர்களை ஆதரிப்பவர்கள் இதை எப்படி செய்வார்கள் ; மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் மீண்டும் வாய்ஸ்…!!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 7:21 pm
Quick Share

ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததை கண்டித்த நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

கடந்த 24ம் தேதி 69வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், RRR, புஷ்பா ஆகிய படங்களுக்கு அதிக அளவு விருதுகள் கிடைத்ததால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடைசி விவசாயி திரைபடத்துக்கும், இரவின் நிழல் பாடலுக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல, கருவறை என்ற ஆவணப்படத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், சிற்பிகளின் சிற்பங்கள் என்ற திரைப்படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில், சர்ச்சையை கிளப்பிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது.

இதனால், விருது அறிவித்ததில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே, “மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது,” என விமர்சனம் செய்திருந்தார். இதேபோன்று பல்வேறு தரப்பினரும் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்தவகையில், மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரிப்பவர்கள், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள், ஜெய்பீம் திரைப்படத்தை கொண்டாடுவார்களா..?,” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே, சந்திராயன் 3 குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 381

0

0