ஆர்எஸ் பாரதியை அதிர வைத்த நீதிபதி… திமுக கூட்டணி கட்சிகள் ‘கப்சிப்’.. ‘அப்செட்”டில் திமுக..!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 9:13 pm
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மூவரும் கீழமை நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது திமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் அமலாக்கத் துறையின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர்களின் விடுதலைக்கு எதிரான வழக்குகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இரு தினங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்ற மாநில போலீஸ் டிஜிபி லேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் நியமிக்க ஆளுநர் ரவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த பைல்களை ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மாநில அரசுக்கே அவர் அனுப்பி வைத்ததால் திமுக தலைமை கொந்தளித்துப் போய் இருந்தது.

இதற்காக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கடும் கண்டனத்தை ஆளுநருக்கு எதிராக பதிவும் செய்தார். அதில் அவருக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான் மூன்று அமைச்சர்களை கீழமை கோர்ட்டுகள் சரிவர விசாரணை நடத்தாமல் விடுதலை செய்துவிட்டதாக கூறி அந்த வழக்குகளை தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக் கொண்டதால் கொதிப்படைந்த ஆர். எஸ் பாரதி இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி மீது குறை கூறுவதுபோல நீண்ட நெடிய பேட்டி ஒன்றையும் அளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டரில் 3600 கோடிக்கு ஊழலும், முறைகேடும் நடந்துள்ளது என்று 2018ம் ஆண்டில் அவர் மீது நான் தொடந்த வழக்கில், வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை வாங்கினார். அந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் வந்தபோது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க கூடாது என்றார்.

அதே நீதிபதி, இரண்டு வாரம் கழித்து வெறும் 44 லட்சம் ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சாத்தூர் ராமச்சந்திரன் மீது தாமாக முன்வந்து விசாரிப்பதாக கூறி,  நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்கிறார்.

பல ஆண்டுகளாக நடைபெற்ற பொன்முடி வழக்கில் அவர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டும் கூட, அதனை தாமாக முன்வந்து விசாரிப்பேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொல்லியுள்ளார். அதேபோல், தங்கம் தென்னரசு மீதான வழக்கு 74 லட்சம் ரூபாய். இந்த அளவுக்கு தொகை கொண்ட வழக்கை பொன்னான நேரத்தை ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி கூறுகிறார். இதனை நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். இதில் இறுதி வெற்றி எங்களுக்கு கிடைக்கும்.

அது மட்டுமல்ல அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த ஓ பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் வழக்குகளில் இருந்து எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களோ, அதே அடிப்படையில்தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கபட்டுள்ளனர். அதே அதிமுக அமைச்சர்கள் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், திமுக மீது மட்டும் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. நீதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால், அது உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அதிமுகவினரை விசாரிக்காமல், திமுகவினரை மட்டும் விசாரிப்பேன் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.

இதுபோன்ற அறிவிப்புகள் வரும்போது திமுக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. மற்றபடி, நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டார்.

பொதுவாக நீதிபதிகளுக்கு எதிராக அரசியல் கட்சியினரோ, வேறு யாருமோ அவர்களுடைய தீர்ப்பையும், செயல்பாடுகளையும் கண்டிப்பதுபோல் கருத்து தெரிவிக்க கூடாது. மீறினால் அவர்கள் மீது அந்த நீதிபதி கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர முடியும். இதனால் ஆர் எஸ் பாரதி மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும்படி முறையிட்டார்.

ஆனால் நீதிபதி அதை ஏற்கவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் ஆர் எஸ் பாரதிக்கு நங்கென்று தலையில் ஒரு குட்டு வைப்பது போல் இருந்தது.

ஆனந்த் வெங்கடேஷ் கூறும்போது, “நீதிபதியாக பதவியேற்றதற்கான சட்டப்படியான கடமையை மனசாட்சியுடன்தான் செய்தேன். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள், அந்த கருத்துக்களால் நான் சஞ்சலப்படவில்லை. இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் கிடையாது. அதைப் பார்த்து நிலைதடுமாறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன். எனவே ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

வழக்கமாக ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக தலைமை கண்டனம் தெரிவித்தால் சிறிது நேரத்திலேயே கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கொதித்தெழுந்து கருத்து தெரிவிப்பார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது. ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாகுபாடு காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக பொதுவெளியில் வைத்த பிறகும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் அதற்கு ஆதரவாக இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக அமைதி காத்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த ‘ஷாக்’ கொடுப்பது போல் உள்ளது.

“ஒருவேளை நீதிபதிக்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்தால், திமுக அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் பேசுபொருளாக மாறிவிடுமோ என்று நினைத்து அவர்கள் கருத்து தெரிவிக்காமல் விட்டிருக்கலாம். அல்லது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் தங்களின் நிலைமை சிக்கலாகிவிடலாம் என்ற பயம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 2018ம் ஆண்டு நடந்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது, ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றுதான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். இத்தனைக்கும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. எனவே எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது, ஏதாவதொரு வழக்கில் சிக்க வைத்து அவரை சிறையில் தள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் ஆர் எஸ் பாரதி இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

இதில் ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு வெறும் 44 லட்சம் ரூபாய்தான் என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறார். ஆனால்
13 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தத் தொகையின் இன்றைய மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்கும். ஆனால் ஆர் எஸ் பாரதி பழைய கணக்கை சொல்கிறார். தங்கம் தென்னரசுவின் 76 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு என்பது இன்று 2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும்.

இதையெல்லாம் மிகவும் சாதாரண தொகை என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைக்கும் என்கிறார். அப்படியென்றால் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக வராது என்பதை அவரே ஒப்புக்கொள்வது போலவும் இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் இதேபோல்தான் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றால் அதை எதிர்த்து திமுக அரசு இப்போது கூட மேல்முறையீடு செய்யலாமே? மாநிலத்தில் அவர்கள் ஆட்சிதானே நடக்கிறது?…அதை நாங்கள் செய்வோம் என்று
ஆர் எஸ் பாரதி ஏன் கூறவில்லை?… மூன்று திமுக அமைச்சர்கள் விடுதலையை எதிர்த்து ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல்தான் ஆர் எஸ் பாரதி இப்படி புலம்வதுபோல் தெரிகிறது!” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 265

0

0