மிகப்பெரிய வெட்கக்கேடு… இதைக் கண்டிக்க இபிஎஸ் மற்றும் அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா..? காங்கிரஸ் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 9:44 pm
Quick Share

பாலியல் புகாரில் சிக்கியவரை காப்பாற்றுவதற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது நமது தேசத்திற்கு செய்திருக்கும் மிகப்பெரிய அநீதி என காங்கிரஸ் எம்எல்ஏவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது உலக மல்யுத்தக் கூட்டமைப்பு. இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் விண்வெளியை மிகத்துல்லியமாக அளந்து, நிலவில் தடம் பதித்து, உலகப்புகழ் பெற்றிருக்கும் நிலையில், ஒரு மல்யுத்த கூட்டமைப்பை தேர்தலை நடத்த இயலாமல் போனது மிகப்பெரிய வெட்கக்கேடு. இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு காலம் தாழ்த்தியதே இதற்குக் காரணம். உலக அரங்கில், மல்யுத்தத்தில் பங்கேற்கும் நமது வீர, வீராங்கனைகள் இந்தியத் திருநாட்டின் அடையாளத்தை இழந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான ஒருவரை காப்பாற்றுவதற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது என்பது ஒன்றிய அரசு நமது தேசத்திற்கு செய்திருக்கும் மிகப்பெரிய அநீதியாகும்.

சில மாதங்களுக்கு முன்பு, அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்திய தடகள போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து வீரர்களை அனுப்பவில்லை என்று கொந்தளித்த அ.தி.மு.கவின் தலைவர்களும், பா.ஜ.க.வின் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒன்றிய அரசின் இந்த கையாலாகாத செயலை கண்டிப்பார்களா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 332

0

0