தொடர் தோல்வியால் துவண்டுபோன காங்கிரஸ்… பாஜகவை வீழ்த்த மம்தா வகுக்கும் புது வியூகம் : சம்மதிப்பாரா சோனியா..?

Author: Babu Lakshmanan
11 March 2022, 5:19 pm
mamata - sonia - updatenews360
Quick Share

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் காங்கிரஸ் வரலாற்றில் ஒரு கருப்பு நிகழ்வாகும்.

படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகளும் பரிதாபப்படும் நிலையில் இருந்து வருகிறது. மேலும், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல்தான் தங்களுக்கு கடைசி வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டியதை இந்தத் தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும் எதிர்கட்சியினர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று கூறி, காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

Mamata 5 Lakhs - Updatenews360

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லாதது. உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்துவிடவில்லை. சமாஜ்வாடி கட்சியை தோற்கடிக்க வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது.

காங்கிரஸை நம்பி எதுவும் நடக்காது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் என்னை ஒதுக்கினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவர்களாவது ஒன்றாக இருக்கட்டும், எனக் கூறினார்.

mamata - sonia -updatenews360

ஏற்கனவே, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அல்லாத மாற்று தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இப்படியிருக்கையில், மம்தாவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்குமா..? என்பது சந்தேகம்தான். அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை ஒதுக்குவதும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படும்.

இதனிடையே, படுதோல்வியால் நிலைகுலைந்து போயுள்ள சந்தர்ப்பந்தத்தை மம்தா பானர்ஜி பயன்படுத்திக் கொள்வதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கீழ் காங்கிரசை கொண்டு வர, இது அடித்தளமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 435

0

0