காதலி வீட்டில் வசமாக சிக்கிய காதலன்! அதுக்காக பாகிஸ்தானுக்கா ஓடுவாரு..

24 January 2021, 10:43 am
Quick Share

காதலி வீட்டுக்கு ஒளிந்து சென்ற இளைஞர் ஒருவர், வீட்டில் வைத்து வசமாக சிக்கி கொண்டதால் அவமானம் ஏற்பட, பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டார். இந்த வினோத சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ளது சஜ்ஜன் கா பார் கிராமத்தில் வசித்து வரும், 24 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதல் சில ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், யாருக்கும் தெரியாமல் காதலியின் வீட்டுக்கு சென்ற ராம், அந்த பெண்ணின் பெற்றோரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

இதனை ராமின் பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக, அவர்கள் கூற, தான் செய்தது தவறு தான் என பலமுறை காதலியின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் மனம் மாறவில்லை. இந்த விஷயம் தனது பெற்றோர்களுக்கு தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என அஞ்சிய ராம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓட முடிவு செய்திருக்கிறார். அவர் வசித்து வரும் கிராமம், பாகிஸ்தான் எல்லையோர கிராமம் என்பதால், அன்றைய தினம் இரவே, அவர் இந்திய எல்லையை கடந்திருக்கிறார்.

மகன் மாயமானது குறித்து போலீசாரிடம் புகார் அளித்த ராமின் பெற்றோர், அவர் பாகிஸ்தான் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) கையில் எடுத்துள்ளது. விசாரணையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த போது, அந்நாட்டு ரேஞ்சர் படையிடம் சிக்கியிருக்கிறார் ராம். நிலைமையை பாகிஸ்தான் ரேஞ்சரிடம் விளக்கியிருக்கும் பிஎஸ்எப் அதிகாரிகள், ராமை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

காதல் விவகாரத்தில் பெற்றோருக்கு பயந்து, பாகிஸ்தானுக்கு இளைஞர் தப்பி ஓடிய இந்த சம்பவம் வியப்பை தான் உண்டாக்குகிறது!