திருப்பதியில் DECLARATION FORM முறை ரத்து : அனைத்து மதத்தினரும் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு!!
19 September 2020, 2:29 pmஆந்திரா : முழு நம்பிக்கையுடன் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்து போடாமல் ஏழுமலையானை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் இந்து அல்லாதோர், டிக்லரேஷன் பாரம் என்று கூறப்படும் தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் தன்னுடைய சொந்த மதம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து கையெழுத்துப் போட்டு கொடுத்த பின் மட்டுமே கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நிபந்தனை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துவங்கி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரை இந்து அல்லாத பல்வேறு முக்கிய பிரமுகர்கள் திருப்பதி மலைக்கு வந்தபோது தங்களுடைய மதம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்து இடாமல் ஏழுமலையானை வழிபட்டு சென்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆந்திர அரசியலில் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் மீது முழு நம்பிக்கையுடன் வரும் நிலையில், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திட தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதனால் இந்து அல்லாதோர் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி மலைக்கு வரும்போது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைக்கு விரைவில் தேவஸ்தானம் முடிவு கட்ட இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இம்மாதம் 23 ஆம் தேதி திருப்பதி மலைக்கு வந்து பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.