ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்ட ராவத் தம்பதி : தேசமே கண்ணீர் மல்க பிரியாவிடை…17 பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை..!!

Author: Babu Lakshmanan
10 December 2021, 6:09 pm
Quick Share

புதுடெல்லி: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ராணுவ விமானத்தின் மூலம் உடல்கள் தலைநகர் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 13 பேரின் உடல்களும் அவர்களின் உறவினர்கள், ராணுவ அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. முப்படைகளின் தளபதிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

பிறகு டெல்லியில் உள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து டெல்லி கண்டொன்மண்ட் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

ராணுவத்தினரின் பேண்டு வாத்தியங்கள் முன்செல்ல, முழு மரியாதையுடன் பிபின் ராவத் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இறுதி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடல்களுக்கு அவர்களின் மகள் இருவர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர், 17 பீரங்கி குண்டுகள் முழங்க இருவரின் உடல்களும் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டு, எரியூட்டப்பட்டது. தேசமே கண்ணீர் மல்க அவர்களுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.

Views: - 423

0

0