துர்கா சிலை கரைப்பின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… அடித்து செல்லப்பட்ட மக்கள்… 8 பேர் உயிரிழப்பு…!

Author: Babu Lakshmanan
6 October 2022, 1:49 pm
Quick Share

மேற்கு வங்கத்தில் துர்கா சிலை கரைப்பின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில் 9 நாட்கள் துர்கா தேவியை வழிபட்ட பின்னர், பத்தாம் நாளாள நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அம்மாநில மக்களின் சம்பிரதாயப்படி, பூஜை செய்யப்பட்ட துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜல்பைகுரியில் மால் ஆற்றிற்கு சிலைகளை கரைப்பதற்காக ஆடல், பாடலுடன் திரளான மக்கள் சென்றனர்.

பூடானில் இருந்து இந்தியாவிற்குள் பாய்யும் மால் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலைகளைக் கரைக்க மக்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றனர். துர்கா அன்னைக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக, ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆற்றின் நடுவில் நின்றிருந்தனர். அப்போது, திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், என்ன செய்வதென்று புரியாமல் ஆற்றின் நடுவே மக்கள் சிக்கிக் கொண்டனர். தண்ணீரின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால் கரையில் நின்றவர்கள் கூட, அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில், ஆற்றிற்குள் நின்றிருந்தவர்களை வெள்ளம் அடித்துச் சென்றது. விபத்தில், சிலர் காப்பாற்றப்பட்டனர். ஆனால், இதுவரை 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசரா விழாவில் சிலை கரைப்பு சடங்கின்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 426

0

0