இறை வழிபாடு தமிழர்களின் அடையாளம்… சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்
; கமல்ஹாசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

Author: Babu Lakshmanan
6 October 2022, 11:47 am
Quick Share

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு என்றும், சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கின்றது எனவும், இருளில் முழ்கவில்லை என தெரிவித்தார். 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது எனவும், சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது மகிழ்ச்சி என தெரிவித்த அவர், தனியார் மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்துவிடுவதாக சிலர் நினைத்து சமூக வலைதளங்களில் எழுதிவருகின்றனர் எனவும், ஆனால் அப்படி இல்லை, இதனால் பொது மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், எனவும் தெரிவித்தார்.

பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது எனவும், இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும் எனவும், 24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார். இதனால், மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் கூறிய அவர், ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது எனவும், மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது எனவும் தெரிவித்தார்.

மின் திருட்டு தடுக்கப்படுதால் சிலர் இந்த போராட்டங்களை தூண்டி இருக்கலாம் என தெரிவித்த அவர், இதனால் மின் துறை ஊழியர்கள்,அதிகாரிகள் பணியிலோ, பதவி உயர்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். இது தொடர்பான முடிவுகள், முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்படுகின்றது என தெரிவித்த அவர், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காகதான் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள் எனவும், புதுவை இப்போது நன்றாக இருக்கின்றது, புதுவை மாடல் இனி உயர்ந்த மாடலாக இருக்க போகின்றது எனவும், மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும், புதுமை மாதிரியாக இருக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது, இதை மக்கள் உணர்வார்கள் எனவும் தெரிவித்தார்.

மின்தடை பிரச்சினையால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை என்றாலும், உடனடியாக பிரச்சினை சரி செய்யப்பட்டது என கூறிய அவர், எந்த போராட்டத்தாலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது எனவும், சுமூக பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தனிபட்ட முறையில் இந்த திட்டம் மக்களுக்கு பலன் தரும் எனவும் தெரிவித்தார். மின் ஊழியர்களின் போராட்டம் திரும்ப வருமா என இனிதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு சிரித்த அவர், இதற்கு சிரிப்பதா, என்ன செய்வது என தெரியவில்லை என தெரிவித்தார். மேலும், தஞ்சை பெரியகோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர், கலாச்சார அடையாளங்களை மறைப்பதை, எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால், அதை ஏற்று கொள்ள முடியாது எனவும், தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு, சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் எனவும் தெரிவித்தார். இந்து அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர், அடையாளங்களை முற்பட்டால் அதுசரியாக இருக்காது எனவும் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.

Views: - 431

0

0