மாணவர்களே பி.ஆர்க் பயில ஆசையா..? உங்களிடம் இந்த தகுதி இருந்தாலே போதும்..! நிபந்தனைகளைத் தளர்த்தியது மத்திய அரசு..!
4 August 2020, 8:10 pm12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு இளங்கலை கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான, நிபந்தனைகளை கல்வி அமைச்சகம் இன்று தளர்த்தியுள்ளது.
“நாடு முழுவதும் பல மாநிலக் கல்வி வாரியங்களால், கொரோனா தொற்றுநோய் காரணமாக 12’ஆம் வகுப்பு தேர்வுகளை பெருமளவு ரத்து செய்ததன் அடிப்படையில், கட்டிடக்கலை கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி அமைச்சகம் 2020’ஆம் ஆண்டிற்கான பி.ஆர்க் பாடப்பிரிவில் சேருவதற்கான தகுதியை தளர்த்த முடிவு செய்துள்ளது.” என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ட்வீட் செய்துள்ளார்.
“இப்போது, இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களுடன் பன்னிரெண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது கணிதத்துடன் டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் 2020-2021’ஆம் ஆண்டுக்கான பி.ஆர்க் கோர்ஸ் முதல் ஆண்டு சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கான சலுகை தானே ஒழிய, நாட்டா எனும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுதி தேர்ச்சீ பெற வேண்டும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.