விவசாய சீர்திருத்த மசோதாக்கள்..! ரெட்டை வேடம் போடும் காங்கிரஸ்..! புட்டுப்புட்டு வைத்த காங்கிரஸ் தலைவர்..!

19 September 2020, 7:37 pm
sanjay_jha_updatenews360
Quick Share

விவசாயிகள் வாழ்வு முன்னேற்றமடைவதை நோக்கமாக் கொண்ட காங்கிரஸ், மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் கொண்டு, மோடி அரசாங்கத்தின் புதிய விவசாய மசோதாக்களை எதிர்க்க வேண்டாம் என இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா தனது சொந்த கட்சியான காங்கிரஸ் தலைமையை விமர்சித்துள்ளார்.

ஒரு ட்வீட்டில் சஞ்சய் ஜா, விவசாயத் துறை மசோதாக்களில் எதிர்க்கட்சியான காங்கிரசும் பாஜகவும் ஒரே பக்கத்தில் இருப்பதாகக் கூறியதோடு, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் காங்கிரஸ் விவசாய விளைபொருட்களை கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதற்காக ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்ய முன்மொழிந்ததை வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட ஜா, விவசாயிகளுக்கான தேசிய சந்தையைத் திறப்பது விவேகமான நடவடிக்கை என்றும் இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் காங்கிரஸை சங்கடப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஜா மேலும், “விவசாயிகளுக்கான தேசிய சந்தையைத் திறப்பது விவசாயிகளின் நியாயமான ஊதியத்திற்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கையாகும். குறைவான இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும். கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட்ட எம்எஸ்பியாக இதை கட்டமைக்க முடியும். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது!” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தன. இதையடுத்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா, காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு திகைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்த மால்வியா, “காங்கிரஸ் அறிக்கையைப் படித்ததாகத் தோன்றும் ஒரே நபர், அதை நினைவில் வைத்துக் கொண்டு, அதன் தலைமையின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு திகைத்துப்போகிறார்.”

மால்வியா மற்றொரு ட்வீட்டில், “காங்கிரஸ் அவர்களின் அறிக்கையை புறக்கணிக்க முடியும். ஆனால் டாக்டர் மன்மோகன் சிங் பற்றி எப்படி?” என கேள்வி எழுப்பி, பிப்ரவரி 2012 அறிக்கையின் இணைப்பை வெளியிட்டார். அதில் பிரதமர் மன்மோகன் சிங் ஏபிஎம்சி சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய மூன்று முக்கிய மசோதாக்களையும் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. நாளை மறுநாள் மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அன்றே மாநிலங்கவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.