அசாம் முன்னாள் முதல்வருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு..! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!

2 November 2020, 4:21 pm
tarun_gogoi_updatenews360
Quick Share

கொரோனா தொற்றால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ளதால் வென்டிலேட்டர் ஆதவுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

86 வயதான காங்கிரஸ் அரசியல்வாதி தருண் கோகோய் நேற்று இரவு உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அபிஜித் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“டாக்டர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. அவரது அம்மோனியா அளவு சற்று அதிகமாக உள்ளது. நாங்கள் அவரை வென்டிலேட்டர் ஆதரவில் வைத்துள்ளோம். அவரின் ஆக்ஸிஜன் செறிவு நிலை தற்போது இயல்பான நிலையில் உள்ளது” என்று அவர் கூறினார்.

மூத்த காங்கிரஸ் அரசியல்வாதி தருண் கோகோயை சிகிச்சைக்காக மாநிலத்திற்கு வெளியே மாற்றப்படுவாரா என்று கேட்டதற்கு, மூத்த மருத்துவர், “அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. ஆனால் இங்கேயே தேவையான வசதிகள் உள்ளன. எனவே அவரை அசாமுக்கு வெளியே மாற்ற வேண்டிய நிலைமை இப்போது இல்லை.” எனத் தெரிவித்தார்.

கோகோயின் உடல்நிலையை ஒன்பது பேர் கொண்ட மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், மாநில அரசால் இந்த குழு அமைக்கப்பட்டது.

மூன்று முறை அசாம் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் தருண் கோகோய், அக்டோபர் 25’ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற மீட்பு சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போதிருந்து, அவர் தனது இல்லத்தில் ஒன்பது மருத்துவர்கள் கொண்ட குழுவால் கவனிக்கப்பட்டு வந்தார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கு முந்தைய நாட்களில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவதற்கான காங்கிரசின் முயற்சியில் கோகோய் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 20

0

0

1 thought on “அசாம் முன்னாள் முதல்வருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு..! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!

Comments are closed.