சரியாக செயல்படாத பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்ப அழைக்கும் உரிமை..! புதிய சட்டம் கொண்டு வந்த பாஜக அரசு..!

7 November 2020, 1:01 pm
Haryana_Panchayat_Right_to_Recall_Updatenews360
Quick Share

பஞ்சாயத்து உறுப்பினர்களில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் மசோதாவை ஹரியானா சட்டமன்றம் நேற்று நிறைவேற்றியதை அடுத்து, கிராமப்புற அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சரியாக செயல்படாத பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்பப் பெரும் உரிமையும் மக்களுக்கு வழங்கியுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில் ஹரியானா பஞ்சாயத்து ராஜ் (இரண்டாம் திருத்தம்) 2020, மசோதாவை  சட்டசபைக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் சபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்ப அழைக்கும் உரிமை :

இந்த மசோதா கிராம பஞ்சாயத்து மற்றும் தொகுதி அளவிலான பஞ்சாயத்து கமிட்டிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கள் பணியில் செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைக்க அனுமதியளிக்கிறது.

இந்த மசோதா இயற்றப்பட்டதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களை அகற்றுவதற்கான உரிமையைப் பெறுகிறார்கள்.

இந்தத் திருத்தம் வாக்காளர்களுக்கு அவர்களின் பொறுப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. 
பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்பப் பெரும் உரிமை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரை நீக்க வேண்டுமானால் ஒரு வார்டு அல்லது கிராம சபையின் 50 சதவீத உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு ரகசிய வாக்குப்பதிவு நடைபெறும். அதில் கிராம சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தால் பஞ்சாயத்து உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு :

இந்த மசோதா மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதையும், கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து கமிட்டிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த மசோதா மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எட்டு சதவீத இடஒதுக்கீட்டையும் முன்மொழிந்துள்ளது.

Views: - 35

0

0