சுதந்திர தினத்திற்காக பேனர் வைத்த பகத்சிங் யுவ சேனா..! இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் பேனரை அகற்றிய மாநகராட்சி..!

11 August 2020, 6:44 pm
Hyderabad_UpdateNews360
Quick Share

ஹைதராபாத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருந்ததாகக் கூறி, நகரத்தின் போக்குவரத்து சந்திப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. பகத்சிங் யுவசேனா என்ற அமைப்பு தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள மொஸ்ஸாம் ஜாஹி சந்தையின் குறுக்கு வழியில் பேனரை வைத்திருந்தது.

சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவும், உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் லட்டு யாதவ் என்பவர் அந்த பேனரை வைத்துள்ளார். பிரதமர் மற்றும் லட்டு யாதவ் தவிர, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஆகியோரின் படங்களும் இந்த பேனரில் இருந்தன.

இந்நிலையில் பேனரில் இருந்த வாசகங்கள் ஆத்திரமூட்டும் வகையில் இருந்ததாகக் புகார் வந்த நிலையில், பேனரை வைக்க எந்த முன் அனுமதியும் பெறவில்லை எனக் கூறி, கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜி.எச்.எம்.சி) அதிகாரிகள் அதை அகற்றினர்.

குறிப்பாக, மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) தலைவர் அம்ஜெதுல்லா கான், பேனர் தொடர்பாக அதிகாரிகள் மெளனமாக இருப்பதாகவும், இது நகரத்தில் அமைதி மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ சார்பு அமைப்புகள் குறித்து ஹைதராபாத் காவல்துறை மென்மையான அணுகுமுறையை பின்பற்றுவதாகவும் கான் மேலும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அணுகுமுறை எதிர்வரும் முஹர்ரம் மற்றும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது மாநிலத்தில் வகுப்புவாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் மேலும் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், மாநில டிஜிபிக்கும், ஹைதராபாத் போலீஸ் கமிஷனருருக்கும் பேனரின் வீடியோவை கான் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், வெறுப்பு கருத்துக்களை பரப்பியதற்காக ராஜா சிங், கிஷன் ரெட்டி மற்றும் பலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்வலர் சையத் அப்தாஹு கஷாப் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நேற்று இரவு பேனர் அகற்றப்பட்டபோது, லட்டு யாதவ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இருப்பினும், மாநகராட்சி அதிகாரிகள் பேனரை அகற்றினர்.

Views: - 7

0

0